How to fill SIR form in Tamil?

Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to  kalvisri.education@gmail.com 
Join Our Whatsapp Group Click Here

வாக்காளர் பட்டியலில் இடம்பெற... எஸ்.ஐ.ஆர். படிவத்தை நிரப்புவது எப்படி?

தேர்தல் ஆணையம் வழங்கும் எஸ்.ஐ.ஆர். படிவத்தில் என்ன இருக்கிறது? நிரப்புவது எப்படி?

How to fill SIR form in Tamil?


தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை தேர்தல் ஆணையம் நவ. 4 முதல் மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாடு முழுவதும் அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் தேர்தல் ஆணையத்தின் கணக்கீட்டுப் படிவம் வழங்கப்பட்டு வருகிறது.


இதுவரை உங்களுடைய பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்தாலும் இனி வரும் தேர்தல்களில் வாக்களிக்கவும் வாக்காளர் பட்டியலில் உங்களுடைய பெயர் இடம்பெறவும் நீங்கள் இந்த படிவத்தைப் பெற்று கண்டிப்பாக நிரப்பித் தர வேண்டும்.


ஏனெனில் தேர்தல் ஆணையம் ஒவ்வொரு ஆண்டும் மேற்கொள்வது சிறப்பு சுருக்க திருத்தம்(எஸ்.எஸ்.ஆர்.) இதன்படி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது, நீக்குவது, திருத்தங்களை மேற்கொள்வது நடக்கும்.


ஆனால் தேவைக்கேற்ப குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு ஒருமுறை 'சிறப்பு தீவிர திருத்தத்தை(எஸ்.ஐ.ஆர்.) மேற்கொள்ளும். முன்னதாக கடந்த 2002 ஆம் ஆண்டு சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் அறிவித்து அதற்கான பணிகளைத் தொடங்கியுள்ளது. இது வாக்காளர் பட்டியலை முழுவதுமாக ஒருமுறை சரிபார்ப்பதாகும்.


இதுதொடர்பாக தேர்தல் ஆணைய ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வாக்குச்சாவடி அலுவலர்களாக செயல்படுகின்றனர். ஒவ்வொரு தொகுதிக்கும் தனித்தனியாக நியமிக்கப்பட்டுள்ள அலுவலர்கள் படிவத்தை வீடுவீடாகச் சென்று வழங்குகின்றனர்.


வருகிற டிச. 4 ஆம் தேதிக்குள் நீங்கள் இந்த படிவத்தை நிரப்பிக் கொடுக்க வேண்டும்.

படிவத்தில் என்ன இருக்கிறது? நிரப்புவது எப்படி?


தற்போது இருக்கும் வாக்காளர் பட்டியலின்படி வாக்காளரின் பெயர், வாக்காளர் அடையாள அட்டை எண், முகவரி, வாக்காளர் பட்டியல் வரிசை எண், பாகம் எண், வாக்குச்சாவடி பெயர் மற்றும் அமைவிடம், சட்டமன்றத் தொகுதியின் பெயர், க்யூஆர் கோடு, தற்போதைய புகைப்படம் ஆகியன ஏற்கெனவே அச்சிடப்பட்டிருக்கும். தற்போதைய புகைப்படத்திற்கு அருகில் புதிய புகைப்படத்திற்கான இடம் இருக்கும். அதில் உங்களுடைய இப்போதைய புகைப்படத்தை ஒட்ட வேண்டும்.


இதன் பிறகு கீழே கேட்கப்பட்டுள்ள விவரங்களை நீங்கள் நிரப்ப வேண்டும்.


வாக்காளரின் பிறந்த தேதி, ஆதார் எண், கைப்பேசி எண் ஆகியவற்றை நிரப்ப வேண்டும். பின்னர் தந்தை//பாதுகாவலர் பெயர், தந்தை/பாதுகாவலர் வாக்காளர் அடையாள அட்டை எண், தாய் பெயர், தாயாரின் வாக்காளர் அடையாள அட்டை எண், கணவன்/மனைவி பெயர் மற்றும் அவரின் வாக்காளர் அடையாள அட்டை எண் ஆகியவற்றைக் குறிப்பிட வேண்டும்.


இதற்கு கீழே மேலும் ஒரு விவரம் கேட்கப்பட்டிருக்கும்.

 
2002ல் நீங்கள் வாக்களித்திருந்தால் முந்தைய(2002) சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் பட்டியலில் உள்ள உங்களின் விவரங்களை பதிவிட வேண்டும். உங்களுடைய பெயர், அடையாள அட்டை எண், மாநிலம், மாவட்டம், சட்டமன்றத் தொகுதியின் பெயரை குறிப்பிட வேண்டும்.


ஒருவேளை நீங்கள் 2002ல் வாக்களிக்கவில்லை என்றால் 2002ல் வாக்காளர் பட்டியலில் உள்ள உங்களுடைய தாய் அல்லது தந்தையின் விவரங்களைக் குறிப்பிட வேண்டும். அதாவது தந்தையின் பெயர், அவரின் வாக்காளர் அடையாள அட்டை எண், சட்டமன்றத் தொகுதி, மாவட்டம், மாநிலம் ஆகியவற்றைக் குறிப்பிட வேண்டும்.


இறுதியாக வாக்காளரின் கையொப்பம் என்ற இடத்தில் நீங்கள் கையொப்பம் இட வேண்டும். உங்கள் தொகுதி வாக்குச்சாவடி அலுவலரும் கையெழுத்திடுவார்.


2002 சிறப்பு தீவிர திருத்த பட்டியலில் உங்களுடைய பெயர், தாய் அல்லது தந்தையின் பெயர் இருந்தால் எந்த கூடுதல் ஆவணங்களும் தேவையில்லை. ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் வாக்குச்சாவடி அலுவலர் உங்களுடைய அடையாள ஆவணங்களைக் கேட்கலாம்.


அந்த வாக்காளர் பட்டியலில் உங்களுடைய பெயரும் இல்லை, உங்களுடைய பெற்றோரின் பெயரும் இல்லை என்றால் உங்களுடைய படிவம், அடையாள ஆவணங்களின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் முடிவு செய்யும். அந்த சமயத்தில் அடையாள ஆவணங்களை கண்டிப்பாக கொடுக்க வேண்டும்.


படிவத்தில் வெள்ளை நிற பின்னணி கொண்ட புதிய புகைப்படத்தை ஒட்ட வேண்டும்.


இரு பிரதிகள் வழங்கப்படும் நிலையில் அதனை பூர்த்தி செய்து ஒன்றை வாக்குச்சாவடி அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும். மற்றொரு பிரதியில் அவரிடம் ஒப்புதல் பெற்று வைத்துக்கொள்ள வேண்டும். படிவத்தை ஜெராக்ஸ் எடுத்து வழங்க முடியாது.


அதனால் திருத்தங்கள் இல்லாமல் கவனமாக நிரப்ப வேண்டும். நிரப்பியவுடன் அதை ஒரு பிரதி எடுத்து வைத்துக்கொள்ளலாம் அல்லது ஆவணமாக ஸ்கேன் செய்து எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.


உங்களுக்கு நிரப்புவதற்கு கடினமாக இருந்தால் அலுவலரிடம் அல்லது அரசியல் கட்சிகளின் சார்பில் உள்ள 2 ஆம் நிலை வாக்குச்சாவடி அலுவலர்களின் உதவியைப் பெறலாம். தவறுகள் இன்றி படிவத்தை நிரப்ப வேண்டும்.


படிவம் பூர்த்தி செய்வதில் ஏதேனும் சந்தேகம் இருப்பின், படிவத்தில் குறிப்பிட்டுள்ள வாக்குச்சாவடி அலுவலரின் கைப்பேசி எண்ணில் தொடர்புகொண்டு விவரங்களைத் தெரிந்துகொள்ளலாம். படிவத்தில் வாக்குச்சாவடி அலுவலரின் பெயர் மற்றும் தொடர்பு எண் இருக்கும்.


டிச. 4 ஆம் தேதிக்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை வழங்க வேண்டும். படிவத்துடன் முதலில் எந்த ஆவணங்களையும் வழங்கத் தேவையில்லை எனவும் உங்கள் விண்ணப்பங்களில் சந்தேகங்கள் இருந்தால் தேவைப்பட்டால் வாக்குச்சாவடி அலுவலர் உங்களிடம் ஆவணங்களைக் கேட்பார்.

2002 வாக்காளர் பட்டியலில் சரிபார்ப்பது எப்படி?

உங்கள் தொகுதிக்கு வரும் வாக்குச்சாவடி அலுவலர் 2002 சிறப்பு தீவிர திருத்த வாக்காளர் பட்டியலை வைத்திருப்பார். அவரிடம் உங்களுடைய தொகுதி, பாகம் எண் உள்ளிட்ட விவரங்களைக் கூறி கேட்கலாம். https://voters.eci.gov.in/ அல்லது https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2002.aspx என்ற இணையதள பக்கத்திற்குச் சென்று உங்கள் விவரங்களை உள்ளிட்டு கண்டறியலாம்.


கட்சி அங்கீகரிக்கப்பட்ட '2 ஆம் நிலை வாக்குச்சாவடி அலுவலர்'


தேர்தல் ஆணையத்தால் ஒரு வாக்குச்சாவடி அலுவலர் நியமிக்கப்படுவார். அவர்களுக்கு உதவியாகவோ அல்லது ஒவ்வொரு தொகுதி மக்களுக்கு உதவும் பொருட்டு அந்தந்த கட்சிகள் ஒரு வாக்குச்சாவடி அலுவலரைத் தயார் செய்து நியமிக்கும்.


அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் ஏற்கெனவே கட்சி சார்பில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பயிற்சி வழங்கி நியமித்துள்ளது.


எனவே படிவம் தொடர்பான சந்தேகங்களுக்கு 2002 பட்டியலில் பெயர் இருக்கிறதா என தெரிந்துகொள்ள உங்கள் தொகுதியில் உள்ள கட்சி சார்ந்த வாக்குச்சாவடி அலுவலர்களைத் தொடர்புகொள்ளலாம். அவர்கள் உங்களுக்கு படிவத்தை நிரப்பியும் தருவார்கள்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.