Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to kalvisri.education@gmail.com
Join Our Whatsapp Group Click Here
ஏன் வேண்டாம் மும்மொழி? மத்திய அமைச்சருக்கு அன்பில் மகேஸ் பதில்!
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியதற்கு பதிலளிக்கும் விதமாக அண்ணாதுரை பேசிய உரையை தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பகிர்ந்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலத்தின் வாரணாசியில் இன்று தொடங்கிய காசி தமிழ்ச் சங்கம் 3.0 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், “தமிழகத்திற்கு வழங்கவேண்டிய கல்வி நிதி நிலுவையில் இருப்பது எனக்குத் தெரியும். தமிழக அரசு அரசியல் காரணத்திற்காக தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மறுக்கின்றனர்.
உள்ளூர் மொழிக்கே முதலிடம் என்ற தேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு எதிர்க்கிறதா? மும்மொழிக் கொள்கையை பிற மாநிலங்கள் ஏற்கும்போது தமிழக அரசு ஏன் ஏற்க மறுக்கிறது. தமிழக அரசு மட்டும் இருமொழி கொள்கை என்று மக்களை குழப்புகிறது.
தேசிய கல்விக் கொள்கையை ஏற்காத பட்சத்தில் தமிழகத்திற்கு ரூ.2152 கோடி கல்வி நிதியை விடுவிக்க சட்டத்தில் இடமில்லை” என்று தெரிவித்திருந்தார்.
அவரின் பேச்சுக்கு பதிலளிக்கும் விதமாக ‘ஏன் வேண்டாம் மும்மொழி?’ என தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பேசிய உரையை தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில், ’உரிமையைக் கேட்கிறோம்; உபகாரமல்ல, இழந்ததைக் கேட்கிறோம்; இரவல் பொருளல்ல. எம்மிடமிருந்து பறித்துக்கொண்டதைக் கேட்கிறோம்; பிச்சையல்ல. இந்த மூலக்கருத்தை உணரா முன்னம் வடவரின் கொட்டம் அடக்கப்படுவது முடியாத காரியமாகும் - பேரறிஞர் அண்ணா’ என பதிவிட்டுள்ளார்.
வாசகர்களின் கருத்துக்களை அன்புடன் வரவேற்கின்றோம்.