Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to kalvisri.education@gmail.com
Join Our Whatsapp Group 8778711260
9ம் வகுப்பு தேர்வெழுதிய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி: புதுவை அரசு அறிவிப்பு- காரணம் இதுதான்..
வரும் 2023-24ம் கல்வி ஆண்டில் இருந்து மத்திய இடைநிலை கல்வி வாரியத்துடன்(சிபிஎஸ்இ) புதுச்சேரி அரசு பள்ளிகள் இணைய உள்ளன. இதன் காரணமாக, இந்தாண்டு 9 வகுப்புத் தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களையும் தேர்ச்சி பெற்றுள்ளதாக அம்மாநில அரசு தெரிவிதுள்ளது. இதுதொடர்பாக, உத்தரவை அம்மாநில கல்வி துறை இயக்குனர் பிரியதர்சினி வெளியிட்டுள்ளார்.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 700-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகள் உள்ளன. புதுச்சேரி, காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் தமிழ்நாடு பாடத்திட்டங்களே பின்பற்றப்பட்டுவருகின்றன. அதேபோல, ஏனாம் மாவட்டத்தில் ஆந்திர மாநிலத்தின் பாடத்திட்டமும், மாஹேவில் கேரள மாநிலத்தின் பாடத்திட்டமும் பின்பற்றப்பட்டுவருகின்றன.
புதுவையில் செயல்பட்டு வரும் சில அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு சிபிஎஸ்இ கல்வி முறை பின்பற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில், யூனியன் பிரதேசத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளையும் சிபிஎஸ்இயுடன் இணைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, அனைத்து அரசுப் பள்ளிகளிலும், சிபிஎஸ்இ பள்ளி பாடத்திட்டங்கள் வரும் கல்வி ஆண்டில் 9ம் வகுப்பு வரை தொடங்கும்.
21-ம் நூற்றாண்டில் வரும் அற்புதமான புதிய வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளவும், நீட், ஜேஇஇ போன்ற போட்டித் தேர்வுகளுக்கு தயாராகவும் இந்த இணைப்பு தேவைப்படுவதாக அம்மாநில பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் நமச்சிவாயம் முன்னதாக கருத்து தெரிவித்தார்.
ஆனால், இந்த இணைப்புக்கு புதுவை மாநிலத்தில் உள்ள திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. முன்னதாக, புதுச்சேரி எதிர்க்கட்சித் தலைவரும், மாநில தி.மு.க அமைப்பாளருமான சிவா இது குறித்து வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது, ‘ஜனநாயகத்துக்கு விரோதமாக எடுக்கப்பட்ட முடிவு. இதுகுறித்து, புதுவை கல்வி அமைச்சர் சட்டமன்றத்தில் ஏன் விவாதிக்கவில்லை. ஏன் பொதுமக்களை அழைத்து கருத்து கேட்கவில்லை.
புதுச்சேரி அரசின் கல்வித்துறையில் கீழுள்ள பள்ளிகளை சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்துக்கு மாற்றுவதால் நமது மாநிலத்தின் கல்விக்கான அதிகாரம் முற்றிலுமாகப் பறிக்கப்படும். மேலும், பள்ளிகளில் மாணவர் சேர்க்கை, ஆசிரியர் பணி நியமனம் போன்ற அனைத்து உரிமைகளும் மத்திய அரசின் கைகளுக்குப் போய்விடும் பெரும் அபாயம் இருக்கிறது.
தமிழ், தெலுங்கு, மலையாளம் என மும்மொழி பேசும் புதுச்சேரி பிராந்தியப் பகுதிகளில் தாய்மொழி மற்றும் ஆங்கிலத்தை இருமொழிக் கொள்கைகளுடன் பின்பற்றிவருகிற தனித்தன்மை வாய்ந்த மாநிலம் புதுச்சேரி. ஒற்றைக்குடையின் கீழ் புதுச்சேரி கல்வித்துறையைக் கொண்டுவருவோம் என மத்திய அமைச்சர் கூறுவது சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தின் மூலம் இந்தித் திணிப்பை செய்யும் முயற்சி" என்று தெரிவித்தார்.
வாசகர்களின் கருத்துக்களை அன்புடன் வரவேற்கின்றோம்.