10TH TAMIL POEMS கவிதைகள்.

10 ஆம் வகுப்பு மாணாக்கருக்குரிய கவிதைகள்.


1. தண்ணீர் 
தண்ணீர் தண்ணீர் தண்ணீர்
    எண்ணிச் சேமிக் காததால்
தமிழா இன்று சிந்துவதோ
    கண்ணீர் கண்ணீர் கண்ணீர்
கோயிலைப் பெருக்கி மகிழ்ந்தோம்
    குழந்தை பெருக்க மறந்தோம்
வெடியொலி கேட்டுச் சிரித்தோம்
    மழை ஒலி கேட்க மறந்தோம்
காற்றில் மாசு கலந்தோம்
    ஊற்று நீர் கலைந்தோம்
ஊடகங் கண்டு களித்தோம்
    ஊருணி நீரின்றித் தவித்தோம்
அழுது பயனில்லை இன்று
     உழுக மழை வேண்டும் நன்று
ஊடகத்தில் நட்ட மரம் மழை கொட்டு
    நாடெங்கும் மரம் நட்டால் மழை விடாது!


2. மாணாக்கர் கவனத்திற்கு 
புரியாமற் படிப்பது எதற்கும் உதவாது
      புரிந்து படிப்பது என்றும் மறவாது.
அன்று : காற்றுள்ள போது தூற்றிக்கொள்
இன்று:  ஒலியற்ற போது பிடித்துக் கொள்!
காரணம் : தேர்வு காலத்தில் ஒலிபெருக்கி
இன்று வானளாவ ஒலிப்பதால்

3. மாணாக்கர் நற்பழக்கம் 
அதிகாலை எழுந்து பழகு
ஆண்டவனை வணங்கிப் பழகு
இயற்கை வளர்த்துப் பழகு
ஈகை அளித்துப் பழகு
உண்மை பேசிப் பழகு
ஊடகம் தவிர்த்துப் பழகு
எளிமையாய் வாழ்ந்து பழகு
ஏட்டில் எழுதிப் பழகு
ஐயனைப் படித்துப் பழகு
ஒழுக்கம் போற்றிப் பழகு
ஓரமாய் நடந்து பழகு
ஔடதம் நீக்கிப் பழகு

4. பள்ளி 
பால்மணம் மாறாப் பாலர்க்கு
    பாற்பல் முளைத்ததும் பாலர்பள்ளி
பிஞ்சுவயதில் புத்தகப் பைசுமக்க
    அஞ்சு வயதிலோர் ஆரம்பப்பள்ளி
கூடிவிளை யாடுவோம் கூடவே .
    நாடுவம் நாமும் நடுநிலைப்பள்ளி
அன்பும் அறமும் பயின்றுநற்
    பண்பில் உயரவே உயர்நிலைப்பள்ளி
தேனிற் சிறந்தநற் பாடங்களோதி
    வானில் பறக்கவே மேனிலைப்பள்ளி
படித்து நாமுயர பள்ளியீந்த
    படிக்காமே தைபுகழ்வம் பலசொல்லி

5. கல்வி 
அன்பைக் கொடுப்பதும் கல்வியே
    பண்பை வளர்ப்பதும் கல்வியே
அறிவைத் தருவதும் கல்வியே
    செறிவை நிறைப்பதும் கல்வியே
அற்றம் காப்பதும் கல்வியே
    சுற்றம் சேர்ப்பதும் கல்வியே
ஆற்றுணா அளிப்பதும் கல்வியே
    நாற்றிசை புகழ்வதும் கல்வியே
எளிதாய் விளங்கும் கல்வியை
    இளமையில் விரும்பிக் கற்றிடு
வானமாய் விரிந்த கல்வியை
    பாணமாய் விரைந்து கற்றிடு
தானமாய் பெற்ற கல்வியைத்
    தரணியில் பலருக் களித்திடு.

6. முயற்சி 
முயற்சியில் எழுவது பயிற்சி
பயிற்சியில் வருவது அயர்ச்சி
அயர்ச்சியைத் தவிர்ப்பதில் எழுச்சி
எழுச்சியில் விளைவது உயர்ச்சி
உயர்ச்சியின் எல்லை புகழ்ச்சி
புகழ்ச்சியில் தலைக்கனம் வீழ்ச்சி
வீழ்ச்சியில் உறுவது இகழ்ச்சி
இகழ்ச்சியைக் களைவதும் முயற்சி.

7. இளமை 
இளமை என்பதோர் இளந்தளிர்
   இயற்கை அன்னையின் பைந்தளிர்
நற்பழக்கந் தரும்நல் லுயர்வு
   துர்ப்பழக்கந் தரும்வெகு தாழ்வு
இளமையில் கல்லென்றாள் ஔவை
   கற்றால் கடக்கலாம் பல மைல்கள்
அதுவற்றால் கிடக்கலாம் மைல்கல்லாய்
   இளமை ஒரு காட்டாற்று வெள்ளம்
அணையிட்டால் வாழ்வு சோலைவனம்
   அன்றில் அதுவெறும் பாலைவனம்
 தலைமுறை தந்தநல் லனுபவத்தில்
   இளமையே வளமைக்கு வித்து
முதுமைக்கும் அதுவே சொத்து
வரப்புயர வாழ்மன்ன - ஔவை 
பண்புயரப் படிமாணவ! - கலாம்.

8. சிந்தனை 
சிந்திய வியர்வை உணவாகும்
சிந்தையிற் கல்வி அறிவாகும்
சிந்தனை தனிலது சீராகும்
வந்தனை தனிலது வாழ்வாகும்
விந்தைகள் பலவும் எளிதாகும்
தந்தையுந் தாய்க்கும் மகிழ்வாகும்
பந்திக்கு முந்தினால் போதாது
படிப்பிற்கு முந்துதல் வரலாறு.

9. அழகு 
அருகில் இருப்பதில் மலரழகு
தொலைவில் தெரிவதில் மலையழகு
அலையில் மிதப்பதில் கடலழகு
நிழலைத் தருவதில் மரமழகு
பகலில் ஒளிர்வதில் கதிரழகு
இரவில் குளிர்வதில் நிலவழகு
வீசும் தென்றலில் காற்றழகு
இயற்கை போற்றலே நமக்கழகு.


10. இயற்கை 
வெடியெனும் அரக்கனை விடுத்து
ஒலியெனும் அசுரனை ஒழித்து
அன்னையெனும் பூமிதனை மதித்து
தந்தையெனும் மரந்தனை வளர்த்து
பொக்கையெனும் போதுதனைப் போற்றி
குழந்தையெனும் பூக்களைச் சாற்றி
 மாசற்ற சூழல் தன்மை வாழ்த்தி
இயல்பெனும் வாழ்க்கை வாழ்ந்தால்
சீற்றமெனும் காய்தனை மறைத்து
ஏற்றமெனும் கனியளிப்பாள் இயற்கை

11. மலை 
குமரக் கடவுள் ஆள்வதும் மலையே
குறவர் கூட்டம் வாழ்வதும் மலையே
கிழங்கும் தேனும் கிடைப்பதும் மலையே
விலங்குக லுண்டு மகிழ்வதும் மலையே
சூரைக் காற்று தடுப்பதும் மலையே
ஈரக் காற்றை கொடுப்பதும் மலையே
முகில்கள் பஞ்சாய்த் தவழ்வதும் மலையே
மகிழ்வில் மழையைத் தருவதும் மலையே
மருந்தை உடலுக் களிப்பதும் மலையே
விருந்தாய்க் கண்ணுக் கிருப்பதும் மலையே.

12. மழை 
தமிழில் மழை என்பது நிரையசை
மழையில் துளி என்பதும் நிரையசை
துளியில் நதி என்பது நிரையசை
நதியில் அணை என்பதும் நிரையசை
அணையில் வளம் என்பது நிரையசை
வளத்தில் நலம் என்பதும் நிரையசை
நலத்தில் அறம் என்பது நிரையசை
அறத்தில் இறை என்பதும் நிரையசை :

13. வானம்
கானம் செழித்திடல் வேண்டும்
பானம் பருகிடல் வேண்டும்
தானம் தந்திடல் வேண்டும்
நாணம் இருந்திடல் வேண்டும்
மானம் காத்திடல் வேண்டும்
ஞானம் பெருகிடல் வேண்டும்
ஆனதனைத்துந் தளைத்திட வானமே
நீயெம்பூமி பார்த்திடல் வேண்டும்.

14. நட்பு 
அன்பைத் தருவது ஆன்றோர் நட்பு
பண்பைத் தருவது சான்றோர் நட்பு
ஆராய்ந்து பார்ப்பதி லினிப்பது நட்பு
சீராய்ந்து சேர்ப்பதில் சிறப்பது நட்பு
பாடித் திரிவதில் இல்லை நட்பு
கூடிப் பிரிவதில் தெரிவது நட்பு
படிந்து நடப்பதில் இல்லை நட்பு
கடிந்து திருத்துதல் உண்மை நட்பு
முப்பாலில் உள்ள வள்ளுவ நட்பு
எப்போதும் மாறா நல்லக நட்பு.

15. கடல்
கடலம்மா எங்கள் கடலம்மா
நீயே உயிரின் முதலம்மா
முக்காற் பூமியில் வசிக்கின்றாய்
 உப்பாய் நீயும் இருக்கின்றாய்
உணவை எமக்கு அளிக்கின்றாய்
அதற்கும் சுவையைத் தருகின்றாய்
கருமுகில் தனைநீ உருவாக்கி
நிலத்தில் நீராய்ப் பொழிகின்றாய்
பொறுமை கொப்பா யாகின்றாய்
பொங்கி எழுந்தும் அழுகின்றாய்,

16. தந்தை 
தோள்களில் தூக்கி சுமந்திடுவான்
மார்பினில் தாங்கி காத்திடுவான்
அன்பினைக் குறைத்துக் காட்டிடுவான்
பண்பினில் உயர்த்தி மகிழ்ந்திடுவான்
எதிரியாய் நமக்குத் தெரிந்திடுவான்
ஏணியாய் என்றும் விளங்கிடுவான்
சுவைபடப் பலவும் சொல்லிடுவான்
அவையிலும் முந்தச் செய்திடுவான்.

17. தாய் 
சித்திரமாய் நானெழக் கருவறையில் சுமந்தாய்
பத்துமாத மானவுடன் பத்திரமாய்ப் பிரித்தாய்
பிறந்தவுடன் நானழப் பார்த்து நீயும் சிரித்தாய்
பிறநாளில் நான்சிரிக்க நீயதையும் மறந்தாய்
சிறப்புடனே நான்வளர நல்லமுதும் ஈந்தாய்
விருப்புடனில் சுவைத்திட அடுப்பினிலும் வெந்தாய்
அகரந்தொட நீமுதல் ஆசானாய் இருந்தாய்
 சிகரந்தொட சீர்மறு பெற்றோரில் சேர்த்தாய்
மேனிலை தொடநீயும் நல்லேணியா யமைந்தாய்
வானிலென்னை உயர்த்தவுன் வாழ்நாளைக் கழித்தாய்,

18. குழந்தை 
பொக்கைச் சிரிப்பில் பூக்கள் மலரும்
    குதலை மொழியில் குழலும் தோற்கும்
அளைந்த கூழோ அமிழ்தினு மினிக்கும்
    தளர்ந்த நடையில் தடக்கரி தோன்றும்
உழைப்பினில் தோன்று மலுப்பக ளெல்லாம்
    குழவியைக் கண்டதும் கரைந்திடச் செய்யும்
குன்றெனச் செல்வம் கொட்டிக் கிடப்பினும்
    குழந்தைச் செல்வமே உயர்ந்து நிற்கும்.

19. தமிழ் 
உலகின் முதலில் உதித்தமொழி
    உலகப் பொதுமறை தந்த மொழி
நந்தாயின் மடியில் கேட்ட மொழி
    நம்முயிரிலும் மூச்சிலும் கலந்த மொழி
ஔவையும் சொன்ன அமுதமொழி
    செவ்வியல் கொண்ட கொவ்வை மொழி
அறமும் பொருளும் இன்பமென
    வீடும் நோக்கும் நோன்பு மொழி

எவ்வள மில்லை நம்மொழியில்
    அவ்வள முள்ளதே தமிழ்மொழியில்
ஓடமும் ஓடிடும் நதி திசையில்
    பாடம் நாடிடும் தமிழ் மொழியில்
இறவா நிலை தரும் தமிழ் மொழியில்
    அழியாப் புகழ் தரும் தமிழ் மொழியில்
அற்றம் காத்திடும் அறிவையுமே
    கற்றுத் தேர்ந்து தமிழ் வழியில்!

******************************
  • KALVI IMAYAM  சார்பாக அனைவரையும் வரவேற்கின்றோம். 
  • தங்களின் மேலான ஆதரவை தொடர்ந்து அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 
  • ஆசிரிய நண்பர்கள் தாங்கள் உருவாக்கும் படைப்புகளை contact2mekalviimayam@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.  

Post a Comment

0 Comments